நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பேசினோம். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து 1 மணி நேரம் பேசினேன். இந்த சந்திப்பின்போது மாநில தலைவர் பொன்ராதாகிருஷ் ணன் உடன் இருந்தார் என்று கூறியுள்ளார் வைகோ.
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், கூட்டணி அமைப்பதற்கான காரணம் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். அதை நிறைவேற்ற, சக்தி வாய்ந்த, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரசை தோற்கடிப்பதற்காக அதற்கு மாற்று சக்தியாக விளங்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம்; கூட்டணிக்கான பூர்வாங்க பேச்சு நடைபெற்று வருகிறது; பிப்ரவரி 04ம் தேதி நடைபெறம் கட்சியின் பொதுக் குழுவில் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஊழலற்ற அரசியலை ஏற்படுத்துவதற்காகவும் உறுதி பூண்டுள்ளோம்; சுயமரியாதை கருதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம்; கொள்கைக்கு புறம்பாக மீண்டும் அத்தகையதொரு உடன்பாடு ஏற்பட வேண்டும் என நானோ எனது கட்சி தொண்டர்களோ ஒரு போதும் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் வைகோ.