சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மாநாடு

சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.லெனின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பதவியேற்றதும் அந்த கட்சியில் சேர நாடு முழுவதும் இருந்து மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் சுமார் 30ஆயிரம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். மேலும் திராவிட கட்சிகளின் சில முக்கிய தலைவர்களும், ஒரு சில நடிகர்களும், ஆம் ஆத்மி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தமிழக ஆம் ஆத்மி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ‘நாங்கள் எங்கள் கட்சிக்கு பிரபலமானவர்களை தேடிப்போவதில்லை என்ற முடிவுடன் இருக்கின்றோம். அவர்களாகவே விரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம். எங்களுக்கு சாமானியர்களின் ஆதரவு இருந்தால் போதும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும் இம்மாத இறுதியில் சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மாநாடு நடைபெற ஏற்பாடு செய்து வருகிறோம். அந்த மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பங்குபெறுவார்” என கூறினார்.
மேலும் சென்னையில் உள்ள BS Abdur Rahman University என்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜே.ஏ.கே தரீன் இன்று டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.

Leave a Reply