டெல்லி முதல்வரை தொடர்ந்து எளிமையை விரும்பும் ராஜஸ்தான் முதல்வர்

ஆடம்பரத்தை தவிர்க்கும் பொருட்டு தனக்கு அளிக்கப்பட்ட 10 படுக்கையறைகள் கொண்ட பங்களா தேவையில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கூறியதை தொடர்ந்து ராஜ பரம்பரையில் இருந்து வந்த ராஜஸ்தான் முதல்வரும் எளிமையை கடைபிடிக்க விரும்பி தனக்கு சிகப்பு விளக்கு பொருத்திய கார் வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் பாரதிய ஜனதா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக ராஜபரம்பரையில் இருந்து வந்த வசுந்தரா ராஜே சிந்ஹியா பதவியேற்றுக்கொண்டார். மேலும் தான் எம்.எல்.ஏவாக இருந்த போது தனக்கு ஒதுக்கிய சாதாரண வீடே போதுமானது என்றும் வேறு ஆடம்பர மாளிகை தனக்கு தேவையில்லை என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தை போக்குவரத்துக்கு தான் பயன்படுத்தப்போவதில்லை என்றும், பயணிகள் விமானத்தில்தான் இனிமெல் பயணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். முதல்வருக்கு அரசு அளிக்கும் சிகப்பு விளக்கு கார் தனக்கு தேவையில்லை என்றும், தனது பாதுகாப்புக்கு இரண்டு போலீஸார் மட்டும் போதுமானது, மற்றவர்கள் மக்களை பாதுகாக்க பணியாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புகளால் பொதுமக்கள் அவர் மீது மிகுந்த மரியாதையை செலுத்தி வருகின்றனர். இந்த மரியாதை பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு ஓட்டாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply