ராகுல்காந்தி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர்களுக்கு அடி உதை

ராகுல்காந்தி எம்.பியாக இருக்கும் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நேற்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர்கள் இடையே ஒரு பொது விவாத நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த விவாதத்தில் காரசாரமான கருத்துக்கள் பரிமாறப்படும் என எதிர்பார்த்து ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதலில் மேடைக்கு வந்தனர். பின்னர் வந்த ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்து வந்ததால் ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸார் தொப்பியை கழட்டிவிட்டு வருமாறு கூறினர். இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் உடன்படவில்லை. எனவெ இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினர்களுக்கும் விவாதம் முற்றி பின்னர் கைகலப்பில் முடிந்தது. இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகராறின்போது மேடை அருகில் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் மீது கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ஆம் ஆத்மி உள்ளூர் தலைவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சியினரும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர். பொதுவிவாத நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. ராகுல்காந்தியை அவரது சொந்த தொகுதியில் தோற்கடிப்போம் என சமீப காலமாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறிவருவது காங்கிரஸாரை எரிச்சலடைய செய்துள்ளதன் விளைவுதான் இந்த சம்பவம் என கூறப்படுகிறது.

Leave a Reply