இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள டஹானு சாலையில் வந்து கொண்டிருந்த டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பயங்கர தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து நடந்ததால் தீ மூன்று ரயில் பெட்டிகளில் பரவியதை ரயில் பயணிகள் பலர் கவனிக்கவில்லை. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரம் என அஞ்சப்படுகிறது.
அதிகாலை 2.30 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு தீ விபத்தை அறிந்ததும் பயணிகள் அலறியடித்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் தகவல்தெரிந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்து ஏற்பட்ட மூன்று பெட்டிகளை தவிர இதர பெட்டிகளுடன் ரயில் டேராடூனை நோக்கி காலை 5 மணியளவில் கிளம்பியது. அந்த பெட்டிகளில் இருந்தவர்கள் மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.