“ஜில்லா” திரைவிமர்சனம்

மதுரையை கலக்கும் ஒரு பெரிய தாதா மோகன்லால். இவரிடம் அடியாளாக வேலை பார்த்த ஒருவரின் விதவை மகள் பூர்ணிமா பாக்யராஜை அவருடைய வேண்டுகோளுக்கிணங்க மறுமணம் செய்துகொள்கிறார். பூர்ணிமாவின் மகன் விஜய்யை மோகன்லால் தன்னுடைய சொந்த பிள்ளையாக வளர்க்கிறார். மோகன்லாலுக்கும் பூர்ணிமாவுக்கும் பிறக்கும் பிள்ளைதான் மகத்.

விஜய்யை தன்னைப்போலவே ஒரு தாதாவாக வளர்க்கிறார் மோகன்லால். இந்த நேரத்தில் மதுரை போலீஸில் ஒரு ஆள் தமக்கு நெருங்கிய ஆளாக இருக்கவேண்டும் என்று நினைத்த மோகன்லால், விஜய்யை அஸிஸ்டெண்ட் கமிஷனராக தன்னுடைய செல்வாக்கால் மாற்றுகிறார். முதலில் போலீஸ் என்றால் வெறுப்படையும் விஜய், பின்னர் சிறிது சிறிதாக சின்சியர் போலீசாக மாறுகிறார். மோகன்லாலை தாதா தொழிலை விட்டுவிடும்படி அறிவுரை கூறுகிறார். ஆனால் மோகன்லால் மறுக்கிறார். அதன்பின்னர் இருவருக்கும் நடக்கும் பாசப்போராட்டம், மோதல்தான் கதை.

விஜய் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அட்டகாசமான ஓபனிங் காட்சி, ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் ,காஜல் அகர்வாலை முதலில் கலாய்த்து பின்னர் அவரிடம் காதலில் வழியும் காட்சி என விஜய் தன் பார்முலாவை தவறாமல் கடைபிடித்திருக்கிறார்.

காஜல் அகர்வாலுக்கு பாதிநேரம் சூரியுடன் சேர்ந்து காமெடி பண்ணவே நேரம் சரியாகிவிட்டது. பாடல் காட்சிகளில் படு தாராளம். வேறு சொல்லிக்கொள்ளும்படி நடிப்பு வெளிப்பட வாய்ப்பு இல்லை.

படத்தில் சின்சியராக நடித்திருக்கும் ஒரே நடிகர் மோகன்லால்தான். இவர் இல்லாவிட்டால் இந்த படம் என்ன கதிக்கு ஆளாகியிருக்கும் என்பது படத்தை பார்த்தவர்கள் உணர்வார்கள். தனது அனுபவ நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ். விஜய் எப்படி திடீரென அசிஸ்டெண்ட் கமிஷனாராக முடியும், கூடவே இருக்கும் சம்பத் வில்லன் என்று தெரியாமல் இருப்பாரா மோகன்லால், மகத் கொலைப்பழி விஜய் மீது எப்படி விழும், என்று பல கேள்விகள் எழும். இயக்குனர் விஜய் படம் என்றால் லாஜிக் தேவையில்லை என்று நினைத்துவிட்டாரோ என்னமோ?

இமான் இசையில் இசை அமர்க்களம். பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், எடிட்டிங் போன்றவை அனைத்தும் நன்றாக அமைந்திருந்தாலும் படத்தின் நீளம் வெறுப்படைய வைக்கிறது.

ஜில்லா. விஜய் ரசிகளுக்காக மட்டும் கிண்டிய அல்வா.

Leave a Reply