சென்னையில் உலக கபடி போட்டி

உலக அளவிலான கபடி போட்டிகள் சென்னையில் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு மானியமாக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, தமிழகத்தில் மட்டுமின்று உலக அளவில் பிரபலமாகியுள்ளது. உலகின் 20 நாட்டு அணிகள் கலந்து கொள்ளும் உலக அளவிலான கபடி போட்டி சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் நான்காம் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அரசு மானியமாக ரூ.1 கோடி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஈரான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா, சைனீஸ் தைபே, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 20 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. பெண்கள் அணி கலந்து கொள்ளும் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதுமட்டுமின்று தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் வீரர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்க, உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க என  மொத்தம் ரூ.4 கோடியே 5 லட்சம் ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இன்று வெளியிடப்பட்ட தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply