முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று மாலை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தலைமை செயலகத்தில் திடீரென சந்தித்து பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அவர் காங்கிரஸ் அல்லது பாஜகவில் சேருவார் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை திடீரென கங்குலி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மம்தா கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, ‘தான் புதியதாக தொடங்க இருக்கும் பள்ளிக்கூடம் சம்மந்தமாக முதல்வருடன் ஆலோசனை செய்ய வந்ததாகவும், அரசியலில் ஈடுபடுவது குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை என்றும் விளக்கம் அளித்தார். இதை மேற்குவங்க நல்வாழ்வுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாசும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் கங்குலி கூடிய விரைவில் அரசியலில் குதிப்பார் என மேற்குவங்க அரசியல் புள்ளிகள் ஆருடம் கூறுகின்றனர்