ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரத்தில் நேற்று ஒரு உணவகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உடல்சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தீவிரவாத தாக்குதல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உலக நாடுகளின் ராணுவ அணிவகுப்பு இருந்தும் தலிபான்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று தலைநகர் காபூலில் உள்ள ஒரு உணவகத்தில் புகுந்த தலிபான் தற்கொலைப்படை பிரிவை சேர்ந்த ஒரு தீவிரவாதியும், இரண்டு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதி உள்பட 16 பேர் உடல்சிதறி பலியாகினர். இந்த உணவகத்துக்கு அருகே பல நாட்டு தூதரகங்கள் இருப்பதால் எப்பொழுதும் இந்த உணவகம் பரபரப்பாக காணப்படும்.
இந்த தாக்குதலில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் 6 பேர்களும் ஆப்கானை சேர்ந்த 9 பேர்களும் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கான் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஆப்கன் நட்பு பாராட்டி வருவதால் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட தலிபான் நேற்று ஒரு வானொலி செய்தியில் தெரிவித்துள்ளது.