ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இரண்டாவது படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.
உதயநிதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காதல் மற்றும் காமெடி காட்சிகள் நிறைந்த படம் இது கதிர்வேலன் காதல். இந்த படத்தை சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்றும், படம், வரும் பிப்ரவரி 14ல் வெளியாகும் என்று உதயநிதி செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
நயன்தாரா ஏற்கனவே உதயநிதி தயாரித்த ‘ஆதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தாலும், உதயநிதி போன்ற புதுமுக ஹீரோக்களுடன் நடித்திருப்பது இந்த படத்தினை மிகவும் எதிர்பார்க்க வைத்துள்ளது. வழக்கம்போல உதயநிதியின் படத்தில் நடிக்கும் சந்தானம் இந்த படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் நயன்தாரா நடித்து வெளியான ஆரம்பம், ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களும் ஹிட் ஆகியுள்ளதால் இந்த படமும் வெற்றி பெற்று அவர் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.