தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே வரும் 27ஆம் தேதி சுமூக பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கும் எங்களது நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எங்கள் நாட்டு கடல் எல்லையில் நுழைய யாருக்கும் உரிமையில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட யாரிடமும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை.
இந்திய அரசு எங்களுடைய நடவடிக்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று இலங்கை அமைச்சர் மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சரின் இந்த பேட்டி தமிழக தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் மெத்தனப்போக்கு காரணமாகத்தான் இலங்கை அமைச்சர் ஒருவர் இவ்வாறு திமிராக பேட்டியளிப்பதாக தமிழக தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் 27ஆம் தேதி நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.