பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என கீழ்க்கோர்ட் விதித்த உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தவந்த போது, இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமான சுற்றி வர தயார் என ஒரு அதிரடி அறிவிப்பை செய்தார் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இதனால் பெங்களூரை சேர்ந்த எஸ்.உமேஷ் என்பவர் பூனம் பாண்டேவின் அறிவிப்பு கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை பலமுறை பெங்களூர் நீதிமன்றத்தில் வந்தபோதும், பூனம் பாண்டே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த புத்தாண்டு தினத்தன்று கூட பூனம் பாண்டே பெங்களூரில்தான் இருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே அவரை கைது செய்து பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என பூனம் பாண்டே சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எச்.என். நாகமோகன் தாஸ், பூனம் பாண்டேவை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார்.