மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் மொத்தம் 127 பேர்களுக்கு பத்ம விருதுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுஷாந்தா தத்தாகுப்தாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் இவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருதை ரத்து செய்யவேண்டும் என்றும் மேற்கு வங்க பெண்கள் ஆணையம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுஷாந்தா குப்தா ‘தன் மீது பொறாமை கொண்ட சில பல்கலைக்கழக ஊழியர்கள், பெண்கள் அமைப்பை தூண்டிவிட்டு தன்னை பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் செய்து, தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.
இவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த முடிவு இன்னும் சில நாட்களில் தெரியும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.