4 வது ஒருநாள் போட்டி: நியூசி. வெற்றி

நேற்று ஹாமில்டன் நகரில் நடந்த இந்திய-நியூசிலந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இரண்டு ஆட்டத்தில் தோல்வியுற்று ஒரு போட்டியை டையில் முடித்த இந்திய அணிக்கு நேற்றைய போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் நேற்று போட்டி ஆரம்பமானது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. தவான் நீக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய விராத் கோஹ்லி நேற்றைய போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் ரோஹித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் கேப்டன் தோனியும் ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி டெய்லரின் அசத்தல் சதத்தால் 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெய்லர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கிடையேயான 5 வது மற்றும் இறுதிப்போட்டி வரும் 31ஆம் தேதி வெலிங்டன் நகரில் நடைபெறும்.

Leave a Reply