பாராளுமன்றம் முடக்கம்: ரூ.6.75 கோடி வீண்.

நடப்பு ஆட்சியின் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. ஆனால் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களிலும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை. எதிர்க்கட்சிகள் 2ஜி விவகாரம், தெலுங்கானா விவகாரம் ஆகிய பிரச்சனைகளை கிளப்பியதால், நாடாளுமன்றம் ஒட்டுமொத்தமாக முடங்கியது. நேற்று நாடாளுமன்ற கூட்டம் வெறும் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. அந்த 34 நிமிடங்களிலும் எந்த ஒரு மசோதாவும் நிறைவேறவில்லை.

இன்று காலை பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கானா பிரச்சனையால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது. 15 நிமிடங்களில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் கூட்டம் கூடுவதற்கான சாத்தியம் இல்லாததால் இன்று முழுவதும் கூட்டம் நடக்கவில்லை. நாடாளுமன்றம் கூட்டுவதற்காக ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் செலவு செய்யப்படுவதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. அதனால் இந்த இரண்டு நாட்களில் மக்களின் வரிப்பணம் ரூ.6.75 கோடி வீணாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை இனிவரும் நாட்களிலும் தொடரும் என்பதால் பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

Leave a Reply