ரஷ்ய நாட்டின் சோச்சி நகரில் இன்று 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. இந்த துவக்கவிழா நிகழ்ச்சியை 2800 விளையாட்டு வீரர்கள் உள்பட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
சோச்சி நகரில் நடைபெற்ற துவக்க விழாவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் துவக்கி வைத்தார். அதன்பின்னர் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது. 11 வயது சிறுமியின் ஜிம்னாஸ்டிக் காட்சி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அதிபர் புதின் உற்சாகத்துடன் பார்த்தார்.
விழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுத்து வந்தனர். இறுதியில் காளான் வடிவிலான குடையுடன் வந்த நடனக்கலைஞர்களின் அற்புதமான நடனத்தை பார்த்து பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை சர்வதேச விதிப்படி நடத்தாத காரணத்தால் இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டது. ஆனாலும் மூன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடுகின்றனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும்.