முத்து போல் வாழ்க்கை ஜொலிக்க முத்தாலம்மனை தரிசியுங்கள்.

கல்யாணக் கோயில்!

மதுரை வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ளது ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோயில். ஒரு காலை மடக்கி, சதுர்புஜங்களுடன், சூலம், தீச்சட்டி, பாசங்குசம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தியபடி கம்பீரமாகக் காட்சி தரும் முத்தாலம்மனை தரிசித்தாலே, சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில். கன்னிப் பெண்களுக்குக் கல்யாண வரம் தந்தருளும் கோயில் என்பதால், இதை கன்னிக் கோயில் என்றும், கல்யாணக் கோயில் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சிறப்பு வழிபாடு!

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு வணங்கினால், எல்லா வளங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆடி மாதம், ஆனி, நவராத்திரி, தை வெள்ளி ஆகிய நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன.

மாசியில் வீதியுலா!

குறிப்பாக, மாசி மக நட்சத்திர நாளில், காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகளும், அம்மனுக்கு விசேஷ அலங்காரமும் நடைபெறும்.

காலையில், ஸ்ரீகுபேர மகாலட்சுமி பூஜையுடன் துவங்கி, ஸ்ரீசூக்த ஹோமம் முதலான ஹோமங்கள் நடைபெறும். மாலையில் ஹோம பூஜைகள் முடிந்து, திருப்பல்லக்கில் அம்மன் திருவீதியுலா வருவாள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்லக்கில் பவனி வரும் அம்மனை தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அதையடுத்து, தீர்த்தவாரித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறும். இதில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தால், குழந்தை வரம் கிடைக்கும், கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். மூலவரான ஸ்ரீமுத்தாலம்மன் அமர்ந்த கோலத்திலும் உத்ஸவர் நின்ற கோலத்திலும் காட்சி தரும் அழகே அழகு! கோயிலின் ஸ்தல விருட்சம் – வேம்பு.

விளக்கேற்றி வழிபட்டால்..!

இங்கே, தினமும் காலை 6 மணிக்கு, ஸ்ரீதுர்கா, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதியை நினைத்து விளக்கேற்றி வழிபட்டால், வாழ்வாதாரம் சிறக்கும்; சகல ஐஸ்வரியங்களும் வீட்டில் குடிகொள்ளும்; பதவி உயர்வு, வியாபார விருத்தி ஆகியவை ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.

மாசி மக நன்னாளில் அம்மனுக்குப் புடவை சார்த்தி, செவ்வந்தி மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் யாவும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முத்தாலம்மனைக் கண்ணாரத் தரிசியுங்கள்; முத்து போல் வாழ்க்கை ஜொலிப்பதை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்!

Leave a Reply