வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யவில்லை. தேர்தல் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதற்குள் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. சமீபத்தில் டெல்லியில் ஆட்சியை இழந்த அர்விந்த் கெஜ்ரிவால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் முழு வீச்சில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
முதல் 20 வேட்பாளர்களில் ராகுல்காந்தி, கபில்சிபல், சல்மான் குர்ஷித், மணிஷ் திவாரி, மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் என எதிர்பார்க்கப்படும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாகட்சிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் என்ற வேட்பாளரும், மத்திய அமைச்சர் கபில் சிபல் போட்டியிட்டு வெற்றி பெற்ற டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் பத்திரிக்கையாளர் அஷூதோஷும், சல்மான் குர்ஷித் வெற்றி பெற்ற உத்தரபிரதேச மாநிலம் பருக்காபாத்தில் முகுல் திரிபாதியும், மணிஷ் திவாரி வெற்றி பெற்ற லாதியானா தொகுதியில் ஹெச்.எஸ்.பூல்காவும் போட்டியிடுகின்றனர்.
மும்பையில் மேத்தா பட்கர் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்கரி வெற்றி பெற்ற நாக்பூர் தொகுதியில் அஞ்சலி டேமானியாவும் போட்டியிடுகின்றனர்.