ஸ்ரீராகவேந்தர் மகிமைகள்.

ஸ்ரீராகவேந்திரரின் அருளால், ஆதோணியின் திவானாகப் பொறுப்பேற்கும் பேறு கிடைத்தது அடியவர் வெங்கண்ணாவுக்கு. ஒருமுறை, அவரது விருப்பப்படி சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருக்கச் சம்மதித்தார் ஸ்ரீராகவேந்திரர்.

வெங்கண்ணா, தான் போற்றி வணங்கும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை, நவாப் தரிசித்து ஆசி பெறவேண்டும் என்று விரும்பினார். ஆனால், நவாபுக்கோ மகானின் மகிமையில் நம்பிக்கை கிடையாது. எனவே அவரைச் சோதிக்க எண்ணி, ஒரு தட்டில் இறைச்சித் துண்டுகளை வைத்து பட்டுத் துணியால் மறைத்து எடுத்துக்கொண்டு ஸ்வாமிகளிடம் சென்றான். தட்டை அவர் முன் வைத்து, ஸ்ரீமூலராமருக்கு நைவேத்தியமாக ஏற்குமாறு கேட்டுக்கொண்டான். ஸ்வாமிகள் தமது கமண்டல நீரை தட்டின் மீது தெளித்து, துணியை விலக்கினார். தட்டில் மலர்களும் கனிகளும் காட்சி தந்தன!

மகானின் மகிமையை உணர்ந்த நவாப், தனது செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டதுடன், ஏராளமான நிலங்களைத் தானமாகவும் கொடுக்க விரும்பினான். ஸ்ரீராகவேந்திரர், துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மாஞ்சாலா கிராமத்தைத் தானமாகப் பெற்றார். அந்தப் புண்ணிய பூமியே இன்றைக்கு நாம் தரிசிக்கும் மந்த்ராலயமாகப் பரிணமிக்கிறது!

Leave a Reply