சசிகுமார் ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அந்த தியேட்டரில் சந்தானம்தான் ஆபரேட்டர். பழைய படங்கள் மட்டுமே திரையிடுவதால் தியேட்டர் நஷ்டத்தில் ஓடுகிறது. இந்நிலையில் லாவண்யாவுடன் காதல், லாவண்யாவின் அண்ணனுக்கே சசியின் தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலை, தியேட்டர் நடத்தவும், தங்கை திருமணத்திற்கு ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டை போக்க சென்னையில் பெரிய இயக்குனராக இருக்கும் நண்பனை பார்க்க செல்கிறார் சசிகுமார். சென்னையில் எதிர்பாராத விதமாக இவருக்கே இயக்குனர் சான்ஸ் கேட்க, வழக்கம் போல நண்பனுக்காக இயக்குனர் வாய்ப்பு, காதல், எல்லாவற்றையும் விட்டுத்தர தயாராக இருக்கும்போது எதிர்பாராத டுவிஸ்ட். அது என்ன என்பதுதான் மீதிக்கதை.
முதல் பாதியில் தியேட்டரையும், காதலையும் வைத்து நகைச்சுவையாக ஓட்டிவிடுகிறார் இயக்குனர். தியேட்டரில் சசிகுமார், சந்தானமும் செய்யும் காமெடி கலக்கலாக இருக்கிறது. சென்னை வந்தவுடன் சூரியுடன் காமெடியில் கலக்குகிறார்.
படத்தின் ஒரே சிறப்பு அம்சம் இந்நாளில் தியேட்டர் நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லியிருப்பதுதான். அதன்பின்னர் நண்பனுக்காக விட்டுக்கொடுப்பது எல்லாம் சசிகுமார் பட ஸ்டைல் என்றுதான் ஆகிவிட்டதே. சொல்வதற்கு ஒன்றுமில்லை.
புதுமுகம் லாவண்யாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், நடித்தவரை ஓகே ரகம். சந்தானம், சூரி ஆகிய இருவருக்கும் சேர்ந்தால் போல் ஒரு காட்சி கூட் இல்லையென்றாலும், இருவரின் காமெடியும் ஓகே ரகம்.
மெதுவாக மற்றும் லாஜிக் இல்லாத திரைக்கதை, நட்பு, நண்பன், தியாகம் என்று சசிகுமாரின் டிரேட் மார்க் முத்திரை, தியாகம் என்பதற்கு அர்த்தம் தெரியாமலேயே எதற்கெடுத்தாலும் தியாகம் செய்வது என சலிப்பூட்டுகிறார் சசிகுமார்.
பிரம்மன் பிரம்மாதம் என்று சொல்ல முடியாது.