நடிகை ரம்யாவை கடத்தி திருமணம் செய்வேன் என மிரட்டி போஸ்டர் அடித்து ஒட்டிய இயக்குனரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.,
கன்னடத்தில் “பைத்தியக்கார வெங்கட்’ என்ற பெயரில் படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட், தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்துவதற்காக நடிகையும் எம்.பியுமான ரம்யாவை கடத்தி பனசங்கரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார். அதுமட்டுமின்றி பெங்களூரின் முக்கிய இடங்களில் போஸ்டர் அடித்தும் ஒட்டினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெங்களூர் போலீஸார், உடனடியாக தாங்களாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து, இயக்குனர் வெங்கட்டை காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களான வெங்கட்டின் பெற்றோர், தங்கள் மகனுக்கு மனநிலை சரியில்லாததால் இவ்வாறு செய்துவிட்டதாக கூறி, வெங்கட்டை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதன்பின் போலீஸார் வெங்கட்டை ரிலீஸ் செய்தனர்.
இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.