இந்திய அளவில் மூன்றாவது அணியை பலப்படுத்த 11 மாநில கட்சித்தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதிமுக உள்பட பல கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் ஒரு புதிய பிரமாண்டமான கூட்டணி தற்போது உருவாகியுள்ளது. இதில் பல்வேறு மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பித்துரையும், மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் தேவ கவுடா, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூன்றாவது அணியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கரத், ‘காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாரதிய ஜனதா ஒருபோது இருக்கமுடியாது. ஊழல், மதவாதம் ஆகியவற்றில் இரண்டு கட்சிகளின் நிலைகளும் ஒன்றுதான். இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் சவால் கொடுக்கும் வகையில் மூன்றாவது கூட்டணி அமைக்கபட்டுள்ளது என்று கூறினார்.
இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஜெயலலிதாவா என நிருபர்கள் கேட்டபோது ‘பிரதமர் யார் என்பது குறித்து, எந்த அரசியல் கட்சியும் இப்போதைக்கு எழுப்பக் கூடாது என ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரகாஷ் கரத், பதிலளித்தார்.