இந்தியாவின் முதல் அஞ்சல்துறை ஏ.டி.எம் இயந்திரத்தை சென்னையில் இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
சென்னை தி.நகரில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் இந்திய நாட்டின் முதல் அஞ்சல்துறை ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து வைத்து பேசிய ப.சிதம்பரம் ‘இந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று பேசினார்.
விரைவில் நாடு முழுவதும் அஞ்சல்துறை ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், இந்த திட்டத்தை வரும் 2015ஆம் ஆண்டிற்குள் முடிக்க மத்திய அரசும், அஞ்சல்துறையும் இணைந்து திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த ஏ.டி.எம் இயந்திரத்தை பயன்படுத்தும் வசதியை பெறுவார்கள். இதற்காக வங்கிகளின் ஒப்புதலை பெறுவதற்கு முறைப்படி விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் பெற்றவுடன் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.