ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னைய்ல் ராஜீவ் காந்தியின் சிலைகள் ஒருசில இடங்களில் உடைக்கப்பட்டது.
, பெரம்பூர் பேரக்ஸ் மாநகராட்சி பள்ளி அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலை, பெரம்பூர் சுப்பையா மடம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை மற்றும் வேப்பேரி காவல்நிலையம் அருகே இருந்த ராஜீவ் காந்தி சிலை ஆகிய மூன்று சிலைகளும் நேற்று சேதப்படுத்தப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் வட சென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான காங்கிரசார் அந்த பகுதியில் திரண்டனர். மேலும் அவர்கள் பெரம்பூரில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தபோது காங்கிரஸார் போராட்டத்தை தொடர்ந்ததால்அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.