பெண்கள், கல்வி கற்பதே மறுக்கப்பட்டதொரு காலம். இதற்கு எதிராக பாரதியார், பெரியார் உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களையெல்லாம் நடத்த வேண்டிய கொடுஞ்சூழல், இங்கே குடிகொண்டிருந்தது. அந்தப் பெரியோர்கள் நடத்திய போராட்டத்தின் பலன், இன்றைக்கு கல்வி கற்பதில் மட்டுமல்ல… ‘கல்வியாளர்கள்’ எனும் உயர்வரிசையிலும் பெண்களுக்கும் இடம் உண்டு என்று பெருமைப்பட வைத்துக்கொண்டிருக்கிறார்… வசந்திதேவி.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் துறையின் வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் போராடி வரும் கல்வியாளர்… வசந்திதேவி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இருந்து சில பகுதிகளை பார்ப்போம்.
”பிறந்து, வளர்ந்து, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாம் திண்டுக்கல்லில். எங்களின் குடும்பம், சராசரி குடும்பத்தில் இருந்து சற்று வேறுபட்ட குடும்பம். முன்னோர்கள் தொடங்கி என் பிள்ளைகள் வரை பலரும் சாதி, மதம் பாராமல் திருமணம் செய்துள்ளார்கள். என் அப்பா ஒரு வழக்கறிஞர். உறவினர்களில் சிலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனால் நானும் சுதந்திர காற்றை சுவாசித்து வளர்ந்து வந்தேன். தொடர்ந்து நாட்டின் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, சென்னை, ராணிமேரி கல்லூரியில் பி.ஏ., மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. என முடித்த எனக்கு, ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் பிஹெச்.டி வாய்ப்புக் கிடைத்தது. அதை முடித்த கையோடு, திண்டுக்கல் அரசு கல்லூரியில் பேராசிரியையாகச் சேர்ந்தேன்.
இளம்வயதிலிருந்தே சமூகம் சார்ந்து சிந்தித்த நான், அதையெல்லாம் மாணவ சமுதாயத்திலும் விதைப்பதற்கு பேராசிரியப் பணி நல்ல களமாக அமைந்தது. மாணவர்கள் காட்டிய ஆர்வம் காரணமாக… பெண் விடுதலை, பெண்களின் உரிமைகள், பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவற்றை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளையும், ஊர்வலங்களையும் நடத்தினேன். 88-ம் ஆண்டு கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வரானபோது, வேறு எந்தக் கல்லூரியிலும் இல்லாத ஒன்றாக ‘பெண் இலவச சட்ட உதவி மையத்தை’ உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கல்லூரி வளாகத்திலேயே தொடங்கினோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவி மற்றும் தீர்வுகளைப் பெறுவதற்கு கல்லூரி மாணவிகள் மூலமாகவே வழிகாட்ட வைத்தோம். கிராமங்களைத் தேடிச் சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்தோம். இந்த முயற்சி… பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் வீட்டுக்குள்ளேயே கட்டுண்ட நிலையை மாற்றி, உதவி கேட்டு வெளிவரச் செய்தது!
92-ம் ஆண்டு திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஆனேன். மாணவர்கள் மத்தியில் சமூக அக்கறையை வலியுறுத்த வேண்டி, சமூக உணர்வுமிக்கப் பாடத்திட்டங்களை உருவாக்கி, கட்டாயப் பாடமாக்கினோம். இது வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத ஒன்று. நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்னைகள் பற்றியும், மாணவர்களிடையே விவாதம் மற்றும் விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்தினேன். இது மாணவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. குடும்பப் பிரச்னையில் இருந்து மதிப்பெண்கள் பிரச்னை வரை மாணவ, மாணவிகளுக்கான கவுன்சலிங் வழங்க, பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்ட எல்லா கல்லூரிகளிலும் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, கவுன்சலிங் பயிற்சியளித்து, கவுன்சலர்களாக மாற்றினோம். இதனால் மாணவர்கள், தங்கள் பிரச்னைகளிலிருந்து வெளிவந்து, படிப்பில் நன்கு கவனம் செலுத்த முடிந்தது. இப்படி கல்வித் துறையிலேயே என் ஈடுபாடும் அக்கறையும் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே வர, ‘கல்வியாளர்’ என்றாகிப் போனேன்” என்று சிரிக்கும் வசந்திதேவி,
பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை போன்றவற்றில் தன் பங்கை செலுத்தி, கல்வியின் வளர்ச்சிக்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறார்… எடுத்துக்கொண்டிருக்கிறார்.
”இதிலும் பள்ளிக் கல்வித்துறை மீதுதான் எனக்கு அதிக ஈடுபாடு. காரணம், ஒருவருக்கு பள்ளிக் கல்விதான் வாழ்க்கைக்கு அடிப்படை. அது சிறப்பாகக் கிடைத்துவிட்டால், நல்லதொரு உயர்கல்வி தானாகவே அமைந்துவிடும் இல்லையா…” என்று நம்பிக்கை பொங்கச் சொல்லும் வசந்திதேவிக்கு, இன்றைய இந்தியக் கல்வி முறை மீதான கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல….
”வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை கொண்ட கல்வி முறையாக இருக்கிறது இந்தியக் கல்வி முறை. 98% வெளிநாடுகளில், கல்வித்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எந்த பேதமும் இன்றி, அனைத்துப் பள்ளிகளும் ‘அரசு கல்வித்துறை’ என்ற ஒரே குடையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதனால், ‘அருகாமை பள்ளி’ என்ற அடிப்படையிலேயே குழந்தைகள் சேர்க்கை நடைபெறுகிறது. அதாவது வீட்டுக்கு அருகிலிருக்கும் பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பார்கள். வேறு இடத்திலிருக்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி எதிலாவது சேர நினைத்து, கோடி ரூபாய் கொடுத்தாலும் அனுமதி இல்லை.
ஆனால், இந்தியாவில்… ‘தனியார் பள்ளி’ என்ற அரக்கன், கல்வியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். ஏழை மற்றும் பணக்கார மாணவர்களுக்கு தனித்தனி பள்ளிகள், தனித்தனி பாடத்திட்டங்கள் என்றிருக்கின்றன. இதிலும் ‘சிறந்த பள்ளி’ என்ற முத்திரைக்காக குழந்தைகளை வீட்டில் இருந்து வெகு தூரம் உள்ள பள்ளிக்கு அனுப்பி, காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என நான்கு மணி நேரம் பயணம் செய்யவைத்து, சின்னஞ் சிறு குழந்தைகளை வதைக்கிறோம். குழந்தைகள், எந்திரன்கள் அல்ல என்பதை எப்போது உணரப்போகிறோம்.
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம், அவர்களின் ஏகாதிபத்தியம்தான். அதை தட்டிக் கேட்க, அரசாலும் இயலாது. மேலும், பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை பதினோராம் வகுப்பிலேயே நடத்துவது, தங்கள் பள்ளியின் ரிசல்ட்டுக்காக மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மட்டுமே தயார்படுத்துவது, மேல்நிலை வகுப்புகளில் முழு மதிப்பெண்கள் எடுக்க மொழிப்பாடமாக தமிழுக்குப் பதில் வேறு மொழிகளுக்கு திசை திருப்புவது என்று, அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் கண்டிக்கத்தக்கவை.
தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, அரசுப் பள்ளிகளின் தரமும் ஆக்கபூர்வமாக இல்லை. இதனால், ஏழை மாணவர்களுக்கு சத்தே இல்லாத கல்விதான் கிடைக்கப்பெறுகிறது; பணம் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே பல்துறை கல்விகள் சாத்தியமாகிறது” என்று சீற்றம் காட்டும் வசந்திதேவி, இப்படி கல்வி சார்ந்து நம் நாட்டில் நடக்கும் பல்வேறு அவலங்களையும், தவறுகளையும் எதிர்த்து பேசுவதோடு நின்றுவிடாமல்… ‘எய்டு இந்தியா’, ‘கல்வி’, ‘மனித உரிமை கல்வி நிறுவனம்’ போன்ற அமைப்புகளை, ஆர்வமுள்ளவர்களுடன் சேர்ந்து தொடங்கி, அதன் மூலமாக தானும் போராட்டக் களத்தில் நிற்பதுதான் அழகு!
போராட்டங்களின் கூடவே, ஆக்கபூர்வமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார் வசந்திதேவி. மனித உரிமைக் கல்வி நிறுவனம் மூலமாக 6, 7, 8 வகுப்பு குழந்தைகளுக்கு மனித உரிமைக் கல்வியை கற்பிக்க, அரசின் அனுமதியோடு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து, இந்தியாவின் 14 மாநிலங்களில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மனித உரிமை கல்வியை கற்றுத்தருவதிலும், ‘எய்டு இந்தியா’ மூலமாக தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு எளிமையான கல்வி முறைகளின் மூலமாக மாலை நேர வகுப்புகளை எடுப்பதிலும் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
கல்வியாளரில் இருந்து ‘கல்விப் போராளி’ என்றும் வடிவெடித்திருக்கும் வசந்திதேவி, ”ஒவ்வொரு இந்திய குழந்தைக்கும் தரமான, சமமான, இலவச கல்வி கிடைக்கும் நாளை எதிர்பார்த்து தொடர்ந்து செயல்படுவோம்!” எனச் சூளுரைக்கிறார்!
என்னதான் பெண் கல்வி பற்றி பேசப்பட்டாலும், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலும் சரி… அதற்கு பிந்தைய இருபது, முப்பது ஆண்டுகளிலும் சரி, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி அவ்வளவாக அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள் பெரும்பாலான பெண்கள். கல்வியின் மூலமாக சமூகத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர முடியும், அது நாட் டின் வளர்ச்சிக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என் பதைப் பற்றிக் கூட அன் றைக்கு பலருக்கும் தெரியாது.
அதற்கடுத்த காலகட்டத்தில், ‘படிச்சு என்னத்த கிழிக்கப் போகுது. நாளைக்கு ஒருத்தனுக்கு தலை நீட்டப்போற கழுதைக்கு இதுக்குமேல படிப்பு எதுக்கு?’ என்ற கடுஞ்சொல்லுடன், நடுநிலைப்பள்ளியோடு பெண்களின் படிப்பை முடித்துக் கொண்ட குடும்பங்கள்தான் இங்கே அதிகம்.
ஆனால், இன்றைக்கு கல்வி ஜோதி, பெண்களின் கையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது, பன்னிரண்டாவது தொடங்கி, அனைத்து படிப்புகளிலும் முன்னணி இடத்தைப் பிடித்து பெருமிதத்துடன் நிற்கிறார்கள் பெண்கள்.