சென்னை ஆட்டோக்களில் பேரம் பேசி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வாங்கும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான ஆட்டோக்காரராக இருக்கின்றார் ஜி.அண்ணாத்துரை.
இவர் தன்னுடைய ஆட்டோவில் மொபைல் போன் சார்ஜர், அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், இண்டர்நெட் வைபை கனெக்ஷன், அனைத்து செல்போன் நிறுவனங்களின் ரீசார்ஜ் வசதி, மேலும் டேப்லட் கம்ப்யூட்டர் போன்ற வசதிகளை தன்னுடைய ஆட்டோவில் வைத்துள்ளார்.
ஆசிரியர்களிடமும், மருத்துவமனை ஊழியர்களிடம் இவர் கட்டணம் எதுவும் வாங்காமல் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார். மேலும் அன்னையர் தினத்தன்று தனது ஆட்டோவில் ஏறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இலவச பயணம் செய்ய உதவுகிறார்.
தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக கொடுத்து உதவும் அவர் வீதியோரத்தில் அனாதையாக இருக்கும் சிறுவர்களை காப்பகத்தில் சேர்க்க உதவி செய்தும் வருகிறார்.
28 வயதான அண்ணாத்துரை தன்னுடைய ஆட்டோவில் ரெகுலராக வரும் பயணிகளுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளை கேட்டறிந்து அவர்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்துகிறார். வாடிக்கையாளர்களே எனது கடவுள் என்று கூறிவரும் அண்ணாத்துரை அனைத்து ஆட்டோக்காரர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை. அவரது பணி சிறந்து விளங்க சென்னை டுடே நியூஸ் இணையதளம் வாழ்த்துகிறது.