இங்கிலாந்து புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் வோடோபொன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை ரகசியமாக பகிர்ந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளது. இதனால் வோடோபோன் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வோடொபோன் நிறுவனம் இந்தியா உள்பட 21 நாடுகளில் மொபைல் போன் சேவை அளித்து வருகிறது. இந்தியாவில் வோடோபோன் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வோடோபோன் தங்களது வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரிகள் ஆகியவற்றை இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டதாக ஆதாரபூர்வமான தகவல்களுடன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வோடோபோன் நிறுவனம் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பான எந்த ஒரு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியுள்ளது.