சென்னை அருகே உள்ள கடற்கரையில் இரண்டு டால்பீன்கள் கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரிசோ டால்பின் என்ற வகையை சேர்ந்த இரண்டு டால்பின்கள் நேற்று சென்னை அருகே கரை ஒதுங்கியுள்ளது. ஒரு டால்பின் கோவளம் கடற்கரை அருகிலும், மற்றொரு டால்பின் கல்பாக்கம் அருகேயுள்ள உய்யலிபாக்கம் என்ற ஊரின் அருகிலும் கரை ஒதுங்கியுள்ளது.
தகவல் கிடைத்ததும் TREE Foundation என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நேரில் சென்று கரை ஒதுங்கிய டால்பினை சோதனை செய்தனர். உயிரில்லாமல் இறந்து கிடந்த அந்த டால்பின் 6.7 அடி நீளமும் 120 கிலோ எடையும் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த டால்பினின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், அந்த காயங்கள் மீன்பிடிக்க விரிக்கப்பட்ட வலைகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று TREE Foundation அமைப்பின் சென்னை கிளை தலைவர் சுப்ரஜா தாரிணி அவர்கள் தெரிவித்தார்.
உய்யலிபாக்கம் அருகே கிடைத்த டால்பின் 9.6 அடி நீளம் இருந்ததாகவும், டால்பினின் உடல் பெருமளவு சேதம் அடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்தால் உடனடியாக 9440 52242 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி தாரிணி அவர்கள் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.