ரஜினிகாந்த், வைகோவுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு. பாஜக கூட்டணிக்கு ஆதரவா?

Rajini_Invites_azhagiri

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் சிறிது நாட்கள் அமைதியாக இருந்த மு.க.அழகிரி தற்போது திமுக 35 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பிறகு தன்னுடைய தரப்பில் இருந்து காயை நகர்த்த ஆரம்பித்துவிட்டார். 35 வேட்பாளர்களில் தனது ஆதரவாளர்களில் ஒருவர் கூட இல்லை என்பதும், ஸ்டாலின் ஆதரவாளர்களே 100% இருக்கின்றார்கள் என்பதை அறிந்த மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு எதிராக தனது பலத்த நிரூபிக்க முடிவு செய்துவிட்டதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர்.

நேற்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய மு.க.அழகிரி இன்று காலை நடிகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று காலை போயஸ் தோட்டத்தில் உள்ள ர்ஜினியின் வீட்டிற்கு சென்ற மு.க.அழகிரி “ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். என் மகன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பாக பேசிவிட்டு, அவரது ஆசியைக் கோரினேன். ரஜினியின் கோச்சடையான் பட பாடல்களைக் கேட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் பாடலும், ரஜினி பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனைச் சொல்லி, அவரிடம் பாராட்டினேன். மற்றபடி வேறு எந்த அரசியல் பேச்சும் அவரிடம் பேசவில்லை என்று கூறினார்.

ஆனால் அழகிரி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினாலும், கண்டிப்பாக இவர்கள் சந்திப்பில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி விமானநிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து தனியாக அரைமணி நேரம் பேசியுள்ளார்கள். தற்செயலான சந்திப்பா? அல்லது திட்டமிட்ட சந்திப்பா? என்று தெரியாத நிலையில் வைகோ விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற அழகிரி வாழ்த்துக்கள் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து பிரதமர், ரஜினிகாந்த், வைகோ ஆகிய மூவரையும் அழகிரி சந்தித்துள்ளதால் திமுக தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளது.

Leave a Reply