டைமண்ட் இந்தியா மற்றும் வேல்யூமார்ட் கோல்டு நிறுவனம் இணைந்து தெண்டுல்கர் உருவம் பதித்த வெள்ளி நாணயத்தை நேற்று வெளியிட்டுள்ளது. சச்சின் விளையாடிய 200 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளை நினைவு கூறும் வகையில் அந்த நாணயத்தில் சச்சின் 200 என்று பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் சச்சின் தான் அறிமுகமான போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வரை தனது வாழ்நாளில் விளையாடிய மொத்த டெஸ்ட் போட்டிகளின் ரன்கள் 15,921 ஆகும். இந்த எண்களை நினைவு கூறும் வகையில் 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாணயமும் 200 கிராம் எடை கொண்டவை.
நேற்று இந்த நாணயத்தை வெளியிடும் விழா மும்பையில் நடந்தது. இந்த விழாவில் சச்சின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை சேகரித்திருக்கிறேன். ஆனால் அந்த காலகட்டத்தில் நான் அதைவிட சிறந்த காரியங்களை செய்யவேண்டியிருந்தது. அந்த நேரத்தில்தான் என்னுடைய ஆர்வம் லேசாக மாறியது. நாணயங்களை சேகரிப்பதைவிட ரன்களை சேர்ப்பதே எனக்கு சிறந்த வாய்ப்பாக இருந்தது. அதுவே என் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும், திசையையும் காட்டியது என்று கூறினார்.