இன்று முதலீடு செய்பவர்களுக்கு உள்ள பெரிய சவாலே அதை எப்படி திறம்படச் செய்வது. அதற்கு ஏதாவது எளிய வழிகள் பின்பற்றுவதற்கு உள்ளதா என்பதுதான். நம்முடைய வாழ்க்கையில் எதில் வெற்றி பெறவேண்டுமானாலும் நாம் சில எளிய முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆனால் எளிய வழி என்பதாலேயே நிறைய பேர் அதைச் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
1. டேர்ம் இன்ஷூரன்ஸ்
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது தான் முழுமையான இன்ஷூரன்ஸ். ஒருவருடைய வருமானத்துக்கு ஏற்ற வாறு எடுக்கவேண்டும்.
உதராணமாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 10 முதல் 15 மடங்குவரை எடுத்துக்கொள்வது நல்லது. ரூ.5 லட்சம் சம்பாதித்தால் அவர் 75 லட்சம் ரூபாய் அளவுக்கு எடுக்க வேண்டும். மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை தவிர்ப்பது நல்லது.
2. மெடிக்கல் இன்ஷூரன்ஸ்
நம்முடைய வாழ்க்கைமுறை முழுவ துமாக மாறிவிட்டது. இதனால் பல வழிகளில் நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏகப்பட்ட செலவு ஆகும். நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாம் சேர்த்த அத்தனை செல்வத்தையும் நமக்கு வரக்கூடிய நோய் அழித்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்க்கவே நாம் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அதற்கான கவரேஜ் இருந்தாலும் நாம் தனியாக எடுத்து கொள்வது நல்லது.
3. சேமிப்பை உடனடியாக தொடங்கவும்
வேலைக்கு சேர்ந்தவுடன் சேமிப்பை தொடங்கவும். உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். அந்த முதலீடு எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் சரி, அந்த ஒழுக்கம் மிகவும் அவசியம். வேலைக்கு சேர்த்தவுடன் வரக்கூடிய பழக்கம் கடைசி வரை இருக்கும். மேலும் கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்கும் போதுதான் புரியவரும். கூட்டு வட்டியை 8-ஆவது உலக அதிசயம் என்றும் பலர் அழைக்கிறார்கள்.
4. ரியல் எஸ்டேட்
ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஒரு கனவு, அது தப்பில்லை. அதே சமயம் மண்ணில் போட்டால் எப்போதும் நட்டம் இல்லை என்று மீண்டும் மீண்டும் வாங்குவது தவறு. நம்முடைய தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பொருள் இருந்தால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இல்லாவிட்டால் ஏகப்பட்ட சொத்து இருந்தும் மற்ற எதையுமே உபயோகிக்க முடியாத நிலை ஏற்படும்.
5. தங்கம்
தங்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு உலோகம். மேலும் அது ஒருவருடைய சமூக அந்தஸ்தை பெரும்பாலான இடங்களில் பறை சாற்றுகிறது. திருமணத்திற்கு மிகவும் அவசியம். அதே சமயம் அதைப் பாதுகாப்பது மிகவும் சவாலான விஷயம். நம்மால் தினசரி அணிந்து கொள்ளமுடியாத தங்கத்தை வாங்கி அதை லாக்கரில் வைத்து பாதுகாப்பதைக் காட்டிலும் டீமேட் முறையில் அதை வாங்குவதும் எளிது; பாதுகாப்பதும் எளிது. தங்கம் முதலீட்டிற்கு உகந்ததா என்பது கேள்விக்குறியே?
6. இலக்கு தழுவிய முதலீடு
எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் அதற்கு ஒரு இலக்கு இருந்தால் நம்மை அறியாமலேயே கடமை உணர்வு வரும், அந்த உணர்வு நம்மை தொடர்ந்து அந்த முதலீட்டில் இணைந்திருப்பதற்கு ஒரு உத்வேகத்தை தரும். முதலீட்டின் கால அளவிற்கேற்ப நாம் தகுந்த முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன் பெறவேண்டும். நீண்ட கால முதலீட்டிற்கு கொஞ்சம் ரிஸ்க் அதிகமான முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.
7. தாமதமாக திருப்தி அடைதல் (DELAYED GRATIFICATION)
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நீ தேர்வில் அதிக மார்க் வாங்கினால் உனக்கு அதை வாங்கி தருவேன், இதை வாங்கி தருவேன் என்று சொல்வார்கள். குழந்தைகளும் மிகவும் சிரத்தையுடன் படிப்பார்கள். அப்படி கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு மிக அதிகம். இன்று நாம் பார்த்தவுடன் எல்லாவற்றையும் வாங்க நினைப்பதால் பல தேவையற்ற பொருளை வாங்குவதோடு அதனுடைய மதிப்பையும் நாம் அறிவதில்லை. ஒருவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த தாமதமாக திருப்தி அடைதல் மிகவும் முக்கியமான ஒன்று.
8. மியூச்சுவல் ஃபண்ட்
எல்லோராலும் முதலீடு செய்யக்கூடியது. 5 முதல் 7 வருடங்களில் நல்ல பலன் தந்திருக்கிறது. நம்மில் பலர் மாதாந்திர சம்பளக்காரர்களாக இருப்பதால் சிறிது சிறிதாக சேமிக்க முடியும். இந்திய அரசால் ஒழுங்குமுறை படுத்தப்பட்டது; செபி என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. நீண்ட கால அடிப்படையில் நல்ல பயன் தந்துள்ளது. ஃபைனான்சியல் ப்ளானிங்கில் மிகவும் இன்றியமையாத முதலீடு. நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்புகள் அதிகம்.
9. பங்கு சந்தை முதலீடு
இதை முதலீடாக நினைத்து செயல்பட்டால் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் தரும். அதே சமயம் தினசரி வர்த்தகம் செய்தால் நிறைய நஷ்டம் வருவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. இதில் முதலீடு செய்பவர்கள் இதற்காக தங்களுடைய நேரத்தை ஒதுக்கவேண்டும். வாங்கிய பங்கின் செயல்பாட்டை அடிக்கடி கவனிக்க வேண்டும். அதிக ரிஸ்க் அதிக லாபம்.
10. வைப்பு நிதி, போஸ்ட் ஆபிஸ் திட்டம்
இந்த முதலீடுகள் பெரும்பாலும் நம்முடைய குறுகிய கால முதலீடுகளுக்கு பெரிதும் உதவக்கூடியது. பணவீக் கத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தக்கூடியது, நீண்ட காலத்தில் கட்டுப்படுத்தாது. இதில் ரிஸ்க் கிடையாது, எப்போது வேண்டுமானாலும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். ரிஸ்க் இல்லை. நிரந்தர வருமானம்.
சாராம்சம்: வாழ்க்கையில் மிக கடினம் எளிதாக இருப்பதுதான். மேலே சொன்ன அனைத்தும் எளிதானவை, ஆனால் நாம் எப்போதுமே எல்லாவற்றிற்கும் கடினமான தீர்வையே எதிர்நோக்கி உள்ளோம். அதனால்தான் எல்லாவித சங்கடங்களும்.
ஒவ்வொரு முதலீடும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. எனவே நம் முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பு நாம் செய்யும் முதலீடு நம்முடைய இலக்கை அடைவதற்கு உதவுமா என்று பார்த்து முதலீடு செய்யவேண்டும். பணத்திற்கென்று எந்த மதிப்பும் கிடையாது, அது ஒரு காகிதம். ஆனால் அந்த காகிதத்தால் சிலவற்றை நாம் வாங்க முடியும். அதற்கு ’பர்ச்சேசிங் பவர்’ என்று பெயர். அதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வெறும் வார்த்தையில் இது கஷ்டப்பட்டு சேர்த்த பணம் என்று சொல்வதைவிட, ஒரு படி மேலே சென்று அந்த பணத்தை முதலீடு செய்தால், நாம் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதோடு அதனை பல மடங்கு பெரிதாக ஆக்கவும் முடியும்.