செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்கள் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கும் இருக்கலாம் ரிங்டோன் ஃபோபியா என்ற நோய்.
ஏதோ ஒரு சூழ்நிலையையோ, பொருளையோ கண்டு பயப்படுவதற்குப் பெயர் ஃபோபியா. போபியாக்களில் பல வகை உண்டு. அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் வலம் வரும் போபியாவாக மாறிவருகிறது ரிங்டோன் போபியா என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம்.
“நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். அது நடக்காவிட்டால் என்ன ஆகும்? டென்ஷன் ஏற்படும், பதற்றம் உருவாகும், கோபம் வரும். செல்போன் போபியாவிலும் இதே பிரச்சினைதான். செல்போன் அழைப்பு வந்தது போல ஒரு உணர்வு மனதில் அல்லாடிக் கொண்டிருக்கும்.
வாகனத்தில் செல்லும்போது வைப்ரேஷன் மோடில் வைத்திருந் தாலும்கூட வைப்ரேஷன் ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வுவரும். உடனே செல்போனை எடுத்துப் பார்ப்போம். இல்லை என்று தெரிந்ததும் சிலருக்குச் சலிப்பு ஏற்படலாம்.
ஒரே நாளில் பலமுறை இப்படி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஏற்படுவது இயற்கைதானே. இது நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்சினைக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்பட லாம்’’ என்று எச்சரிக்கிறார் அலீம்.
தவிர்க்க என்ன வழி?
இன்று செல்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லு மளவுக்கு எல்லோர் வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்டது. அப்படியானால், ரிங் டோன் போபியாவைத் தவிர்க்க வழியே கிடையாதா? ‘‘இருக்கிறது. அதற்குச் செல்போன் பயன்பாட்டைக் குறைப்பதுதான் ஒரே வழி. இப்போது எந்த அளவுக்குச் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமோ அதைப் பாதியாகக் குறைக்க வேண்டும். இன்று இளைஞர்கள்தான் அதிகளவில் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. ஒரு வேளை அடிக்கடி டென்ஷன், பதற்றம், படபடப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகத் தயங்கக் கூடாது’’ என அறிவுரை கூறுகிறார் அலீம்.
கதிர் வீச்சு பாதிப்பு
ரிங் டோன் போபியா மட்டுமல்ல செல்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் வயது, பாலினத்துக்கு ஏற்றவாறு பல நோய்கள் உருவாகி வருகின்றன. செல்போனைப் பொறுத்தவரை அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் மூளை அதிகம் பாதிக்கப்படுகிறது . செல்போன் கதிர்வீச்சு மூலம் 20 சதவீதம் முதல் 60 சதவீதம்வரை நோய்கள் ஏற்படுவதாகக் கூறுகிறார் அலீம்.
“செல்போன் கதிர்வீச்சு மூலம் மூளைப் பகுதியின் அருகில் உள்ள காது நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது காதுகேளாத் தன்மையை உருவாக்கிவிடும். இதனால் மூளையில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுமா என்பது குறித்துத் தற்போது ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. மூளை பாதிக்கப்படுவதால் வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி எனப்படும் அல்சைமர் நோய் வர வாய்ப்பு உள்ளது. உடல் நடுக்க நோய் எனப்படும் பார்கின்சன் நோய் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் தொடர்கின்றன.
நரம்பியல் தொந்தரவாகத் தலைவலிப் பிரச்சினை ஏற்படலாம். தோள்பட்டையில் செல்போனை வைத்துச் சாய்ந்தபடி பேசுவதால் தோள்பட்டை வலி, கழுத்து வலியும் ஏற்படும் ஆபத்து உள்ளது. செல்போனில் இருந்து வரும் மின்காந்தக் கதிர்வீச்சு காரணமாக மூளை நரம்பு செல்கள் பாதிக்கப்படும்” என்கிறார் அலீம்.
குழந்தைகளுக்கு வேண்டாம்
இன்று குழந்தைகள், சிறுவர், சிறுமிகள்கூடச் செல்போனைச் சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக வளர்ந்த பிறகே மூளை முழு வளர்ச்சியை எட்டும். சிறுவர்கள், குழந்தைகளுக்கு மண்டையோடு மெலிதாகவே இருக்கும். இவர்கள் செல்போனைப் பயன்படுத்தினால் முதுமைக் காலத்தில் ஏற்படும் பல பாதிப்புகள் சிறு குழந்தைகளுக்கும் ஏற்படலாம்.
பொதுவாகச் செல்போன் சூடாகும் வரை பேசுவதைத் தவிர்ப்பது நம்மைக் காக்கும். செல்போனைக் காதுகளுடன் ஒட்டிவைத்துப் பேசாமல் இருப்பதும் நல்லது. ஹெட்போன், புளூடூத், ஸ்பீக்கர் மூலம் பேசினால் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அறியாததல்ல. செல்போனையும் அளவாகப் பயன்படுத்தினால் அல்லல் இன்றி வாழலாம்.