வரும் பாராளுமன்ற தேர்தலை முதல்முறையாக எந்த கட்சியின் கூட்டணியும் இன்றி துணிந்து தனித்து களம் காணூம் அதிமுகவின் சாதக பாதகங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்
இந்த தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது பிரிந்து நிற்கும் எதிரிகள்.
எதிர்க்கட்சிகளில் வலிமையான கட்சிகள் என்று பார்த்தால் திமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிக என்ற மூன்று கட்சிகள்தான். இந்த மூன்று கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்திருந்தால் கண்டிப்பாக அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் இந்த கூட்டணிக்கு போயிருக்கும். ஆனால் இந்த தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகளும் தனித்தனி கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிடுகிறது.
இரண்டாவதாக அதிமுகவிற்கு ஆளும் கட்சி என்ற அந்தஸ்து, போலீஸ் பலம், மற்றும் பணபலம் ஆகியவை ப்ளஸ் பாயிண்ட்களாக உள்ளது. மற்ற கட்சிகளிடம் பணம் தாராளமாக புரண்டாலும், ஆளும் கட்சி என்ற அந்தஸ்து காரணமாக காவல்துறையின் பக்கபலம் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றது.
மூன்றாவது எதிர்த்தரப்பு கூட்டணியில் இருக்கும் குழப்பங்கள். முக்கிய எதிர்க்கட்சி கூட்டணியான பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிகவிற்கு, பாமகவிற்கு தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்தது என கூறப்பட்டாலும், இரு கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து தேர்தல் பணியை செய்ய அவர்களால் முடியவில்லை. ஆளுக்கொரு திசையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலவீனமாக உள்ளது.
பல சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒருசில பாதக அம்சங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறாமலேயே ஜெயலலிதா செய்யும் பிரச்சாரம், பலவீனமான, அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள், விஷம் போல் ஏறியுள்ள விலைவாசி மற்றும் மின்வெட்டு ஆகிய சில பாதகமான அம்சங்களும் அதிமுக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
ஜெயலலிதா சமீபத்தில் சில அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும்பெயர் பெற்றுள்ளன. அவற்றில் மிக முக்கியமனது ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது, மேலும் அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் என பல வாக்காளர்கள் நினைப்பதால், பாரதிய ஜனதா கூட்டணிக்கு வாக்களிப்பதை விட அதிமுகவிற்கு வாக்களித்துவிடலாம் என்றே எண்ணூவதாக உளவுத்துறை தகவல் கூறுகிறது.
எனவே கருத்துக்கணிப்புகள், உளவுத்துறை அறிக்கைகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அதிமுகவிற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் குறைந்தது 30 தொகுதிகள் கிடைக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.