வீட்டிலேயே கீரைத்தோட்டம் வளர்ப்பது எப்படி?

15சத்து நிறைந்த காய்    கறிகளுக்கு மத்தியில் கீரைகளுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. மற்ற  காய்கறிகளுக்கு ஈடாக உடலுக்கு வலிமை சேர்க்கும் ஊட்டசத்துக்களை தன்னகத்தே கொண்டு இருப்பவை  கீரைகள் என்றால் மிகையாகாது. மேலும் குறைந்த விலையில் கிடைப்பவையாக இருந்து வந்த கீரைகளுக்கு அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்க்கும் தன்மை உண்டு. தற்போது கீரைகளை நகர்புறங்களில் பார்ப்பதே அரிதாகி விட்டது. அதற்கு வறட்சியால் உற்பத்தி குறைவு காரணமாக இருக்கிறது. அதனால்  விலையும் ஏறிக்கொண்டே வருகிறது.

மேலும் நாம் விரும்பும் கீரைகளை தேடி, தேடி சென்று வாங்க வேண்டிய நிலை தான் இருக்கிறது. அதற்கு பதிலாக வீட்டிலேயே கீரை செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் கீரை செடிகளை வளர்த்து பராமரிப்பது  சிரமமான காரியம் கிடையாது. அதற்கு அதிக இட வசதி தேவையில்லை. மேலும் நீண்ட நாட்கள் காத்திருந்து  அறுவடை செய்ய வேண்டிய நிலையும் இல்லை. குறைந்த நாட்களிலேயே வேகமாக வளர்த்து விடும் கீரை  வகைகள் இருக்கின்றன.

வீட்டில் அகத்தி கீரை, பசலை கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை உள்ளிட்ட பல வகை கீரைகளை வளர்க்கலாம். அதற்கு சிறிய பானைகளோ அல்லது உபயோகமற்ற டப்பா, பாட்டில்களோ இருந்தாலே  போதுமானது. அதில் கீரைகளை வளர்வதற்கு ஏதுமான மண்ணுடன் ஆற்று மணலையும் கலக்க வேண்டும்.  அதுபோல் சரி பங்கு எருவையும் உரமாக இட வேண்டும். அந்த பானையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் கீரை செடி ஆரோக்கியமாக வளரும். தினமும் 2 முறையாவது தண்ணீர் தெளித்து விட வேண்டும்.

பானையில் வைக்கோல், தேங்காய் நார் போன்றவற்றை போட்டு வைத்தால் தண்ணீர் வெப்பத்தால் ஆவியாவதை  தடுக்கலாம். இதன் மூலம் கீரை செடிகளுக்கு ஈரப்பதம் கிடைத்து கொண்டே இருப்பதால் அது நன்றாக வளரும்.  இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது உரமிட்டு வருவதும் நல்லது. அது கீரைகள் செழிப்பாக வளர உதவும். அதனால் சில நாட்களிலேயே சமைப்பதற்கு கீரைகள் கிடைத்து விடும். அதை அறுவடை செய்து விட்டு மீண்டும் சுழற்சி முறையில் வளர்க்க தொடங்கலாம்.

நாமே உரமிட்டு பக்குவமாக பேணி வளர்ப்பதால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட கீரையாக அல்லாமல் தூய்மையான கீரையை பெற முடியும். அது நமது ஆரோக்கியத்துக்கு நல்லது. பானை, டப்பாக்களில் வளர்க்க போதுமான இடவசதி இருக்காது என நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் காலி இடத்தில் கீரைகளை வளர்க்கலாம்.

வீட்டில் புதினா, கொத்தமல்லி செடிகளையும் நடலாம். அதுபோல் முருங்கை மரக்கன்றையும் ஊன்றலாம். அவை  எளிதில் வளரக்கூடியவை. அவற்றில் உள்ள வைட்டமின், புரத சத்துக்கள் உடல் நலத்துக்கு வலிமை சேர்க்கும்.

Leave a Reply