கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.

8

மே முதல் வாரத்தில் கோயம்பேடு முதல்ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

தற்போது சோதனை ஓட்டம் நடந்து வரும் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரையிலான தூரத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மே முதல் வாரத்தில் நடைபெற உள்ள இந்த சோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை உள்ள 5.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு தற்போது மெட்ரோ ரயில் இயக்கி சோதனைச் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த சோதனை ஓட்டத்தில் குறைந்தபட்சம் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் கோயம்பேடு பணிமனைக்கு வந்துள்ள அனைத்து புதிய ரயில்களும், இதே வழித்தடத்தில் சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது.

அசோக்நகர் முதல் ஆலந்தூர் இடையே கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேல் மெட்ரோ ரயில் பாதை 175 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. அங்கு தண்டவாளம் பதிக்கும் பணி மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகளும் நடந்து வருவதால் தரையில் இருந்து 80 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்தப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூன் மாதம் வரை இந்த சோதனை ஓட்டம் தொடரும் என்றும், வரும் அக்டோபரில் பயணிகளுக்காக ரயில்சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply