விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி போட்டியிடும் 14 இடங்களிலும் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து தேமுதிகவின் 14 வேட்பாளர்களையும் தோற்கடிப்பொம். மேலும் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் என சீமான் நேற்று நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
நாகர்கோவில் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது “கதர் வேட்டி கட்டிய பா.ஜ.க.தான் காங்கிரஸ். காவி வேட்டிக் கட்டிய காங்கிரஸ் தான் பா.ஜ.க என்று பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளையும் ஒன்றாகத்தான் பார்ப்பதாக கூறிய சீமான், ஈழத்தமிழர்களின் நல்வாழ்விற்கு இருகட்சிகளுமே எதிரானவர்கள் என்று கூறினார்.
மேலும் விஜயகாந்த் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாகவும், தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த ஒரு கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க விஜயகாந்த், ராமதாஸ், வைகோ போன்றவர்களுக்கு மனம் வந்தது என்றே தெரியவில்லை என்று கூறினார்.
2ஜி விவகாரத்திற்காக பாராளுமன்றத்தை முடக்கிய பாரதிய ஜனதா, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறினார். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்யும் என்றும், விஜயகாந்த்தை தோற்கடித்து அவரை அரசியலில் இருந்தே விரட்டுவார் என்று கூறியுள்ளார்.