தேர்தல் நெருங்கும் சமயத்தில் கண்டிப்பாக பாரதிய ஜனதாவுக்கும் மோடிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுப்பதாக ரஜினி வாக்குறுதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மோடி-ரஜினி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் நடிகர் நாகார்ஜுனாதானாம். சமீபத்தில் மோடியை சந்தித்த நாகார்ஜுனா, ரஜினியின் ஆதரவு கிடைத்தால் பாரதிய ஜனதாவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மூன்று மாநிலங்களில் அவர் பெயரை சொல்லி ஓட்டுக்கேட்கலாம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என நாகார்ஜுனா சொல்ல, அதற்கென்ன, ரஜினியை பேச வைத்துவிடுவோம் என்று மோடி சொல்லியிருக்கிறார்.
அதன்பின்னர்தான் ரஜினி-மோடி சந்திப்பு தேதி உறுதியாகியது. மோடிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முதலில் ரஜினி தயங்கினாலும், தேர்தல் நேரத்தில் கோச்சடையான் ரிலீஸ் ஆகவிருப்பதால், இந்த சந்திப்பை படத்தின் விளம்பரத்திற்கும் பயன்படுத்தலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கோணத்தில் ரஜினி சிந்தித்து மோடியின் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டாராம்.
மோடி-ரஜினி இருவரும் சென்னையில் உள்ள ரஜினி வீட்டில் அரைமணி நேரம் தனியாக பேசியுள்ளனர். அப்போது ரஜினி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் நெருங்கும் கடைசி சமயத்தில் வெளிப்படையாக வாய்ஸ் கொடுப்பதாக உறுதி கூறியுள்ளார். ரஜினியின் வாய்ஸ் எந்த நேரமும் ஊடகங்களில் வரலாம்.
ரஜினியின் வாய்ஸ் காரணமாக பெரும் பாதிப்பு திமுகவுக்குதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதிமுகவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மறைமுக தொடர்பு இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் பாரதிய ஜனதாவின் எதிரியாக யாருமே அதிமுகவை பார்ப்பது இல்லை. ஆனால் திமுகவை பாரதிய ஜனதாவின் எதிரியாகத்தான் அரசியல்வாதிகளும் மக்களும் நினைக்கின்றனர். இந்நிலையில் ரஜினி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.