கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு, சிங்கள் ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உள்பட பல தமிழீழ விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். மேலும் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டையும் சிங்கள ராணுவத்தினர் கண்டுபிடித்து அதை குண்டு வைத்து தகர்த்தனர்.
இந்நிலையில் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மற்றொரு பதுங்குகுழி வீடு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் உள்ளது. குண்டுவெடிப்பில் சேதமடைந்து உள்ள இந்த வீட்டை ராணுவத்தினர் துளைபோட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
பதுங்கு குழியிலேயே சுமார் 300 முதல் 400 மீட்டர் வரை உள்ளே சென்ற பின்னர் ஒரு வீடு இருப்பதாகவும், அது முற்றிலும் சிதிலமடைந்து இருந்ததாகவும், ராணுவத்தினர் கூறுகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீட்டிற்குள் செல்ல வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இறுதிப்போரின்போது இந்த வீட்டில் இருந்து பிரபாகரன் வெளியே வந்தபோதுதான் ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.