இங்கிலாந்தில் உள்ள கடை ஒன்றில் தனது ஒரு வயது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்த தாய் ஒருவரை அந்த கடையின் ஊழியர் விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் நிறுவன சட்டப்படி கடையின் உள்ளே தாய்ப்பால் கொடுக்க அனுமதியில்லை என்று அந்த ஊழியர் கூறியதற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மிகப்புகழ் பெற்ற நிறுவனம் ஸ்போர்ட்ஸ் டைரக்ட். இந்த கடையில் இன்று காலை Wioletta Komar என்ற 25 வயது பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த கடைக்கு வந்தார். கணவர் டீசர்ட் வாங்கும் மும்முரத்தில் இருந்தபோது தனது ஒரு வயது மகன் பசியால் அழுததால், அங்கிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து மகனுக்கு தாய்ப்பால் கொடுத்தார் Wioletta Komar. அப்போது அங்கு வந்த கடை ஊழியர் ஒருவர், தங்கள் நிறுவன சட்டப்படி தாய்ப்பால் உள்பட வேறு எந்த உணவுப்பொருளும் கடைக்குள் அனுமதி கிடையாது என்றும் அதனால் தயவுசெய்து கடையை விட்டு வெளியேறுமாறும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த Wioletta Komar, சிறிது நேரம் வாக்குவாதம் செய்தும் பலனளிக்காமல் கடையை விட்டு வெளியேறினார். இந்த தகவலை அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். உடனடியாக நாடு முழுவதிலும் இருந்து ஸ்போர்ட்ஸ் டைரக்ட் நிறுவனத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும் அந்த நிறுவனம் தனது நிறுவனத்தில் கொள்கையை மாற்றுவதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது