முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்களுக்கு இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. முருகன், பேரறிவாள, சாந்தன் உள்பட 7 பேர்களும் விடுதலை ஆவார்களா? என்பது இன்று தெரியும்.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன்,பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையாக மாற்றியது. மேலும் இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் அறிவுறித்தியது.
சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை அடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 7 பேர்களையும் விடுதலை செய்யும் அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, 7 பேர்களின் விடுதலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனால் முதல்வரின் விடுதலை அறிவிப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பு 25ஆம் தேதிக்கு முன் அளிக்கப்படும் என சமீபத்தில் நீதிபதி சதாசிவம் அறிவித்ததை திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.