வேலையில்லாத ஏழை எளிய கிராம மக்களுக்காக செயல்பட்டு வரும் மத்திய அரசின் நூறு நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இந்தியாவின் கோடீஸ்வர பிரபலங்களின் பெயர்கள் இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சச்சின், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியார்கள் உள்ளிட்ட சில கோடீஸ்வர வி.ஐ.பிக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை கண்டித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொதிப்பில் உள்ளன.
கோவா மாநிலத்தின் திஸ்வாடி தாலுகாவுக்கு உட்பட்ட சிம்பெல் கிராமத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பயன் பெற்றவர்கள் பட்டியல், நேற்று மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்தான் மேற்கண்ட வி.ஐ.பிக்களின் பெயர்கள் உள்ளன. லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு பெயர்களை கூட கவனிக்காமல் அதிகாரிகள் 100 நாள் வேலைவாய்ப்பு துறையில் சேர அனுமதி கொடுத்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
இந்த பட்டியலில் சேவாக், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என வி.ஐ.பிக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கோவா முதலமைச்சர் மனோஹர் பரிக்கரின் பெயரும் உள்ளது என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜனாதிபதிக்கு புகார் மனு கொடுத்துள்ளது. ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார் என தாங்கள் நம்புவதாக அந்த தொண்டு நிறுவனங்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளன.