காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த முகுந்த்.
காஷ்மிரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து மாநில போலீஸார் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் மூன்று தீவிரவாதிகளும், ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் ஒரு ராணுவ வீரரும் பலியாகினர்.
பலியான முகுந்த் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு இந்து என்ற மனைவியும் அர்ஷிதா என்ற 3 வயது மகளும் உள்ளனர். மேஜர் முகுந்த்தின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
[/columns]