நம் அனைவருடைய எண்ணமும் அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் நம் வீட்டில் தங்கம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அட்சய திரிதியில் தங்கம் வாங்குவது சிறந்ததுதானா? என்பது குறித்த கேள்விக்கு விளக்கம் அளிப்பதுதான் இந்த கட்டுரை.
ஹிந்து மற்றும் ஜெயின் பிரிவினர்கள் வருடத்தில் உள்ள நான்கு புனித நாள்களில் ஒன்றாக அட்சய திரிதியைக் கருதுகிறார்கள். இந்த தினம் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த தினத்தைக் குறிக்கிறது.
மேலும் இந்த தினத்தில்தான் வேத வியாசரும், விநாயகரும் சேர்ந்து இதிகாச புராணமான மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. “அட்சய” என்பதற்கு சமஸ்கிருத மொழியில் என்றும் குறைவில்லாத என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்த நாள் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும். இந்த நாள் நாளடைவில் ஒருவர் புதிதாக தொழில் தொடங்குவது, வீடு வாங்குவது, மொபைல் போன்
வாங்குவது என்று எந்த ஒரு செயல் செய்யவும் மிகவும் உகந்த நாள் என்றும் சொல்லப்படுகிறது. அட்சய திரிதியை மே மாதம் 2-ம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குந்துமணி தங்கம் அதாவது குறைந்த பட்சமாக அரை கிராம் தங்கம் வாங்கினால் கூட, இனி வரும் காலங்களில் நம்மால் நிறைய வாங்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை.
வியாபார உத்தி
சொல்லப்போனால் 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில்தான் அட்சய திரிதியை பற்றி பரவலாக பேச்சு ஆரம்பித்தது. அதாவது கடந்த 10 முதல் 15 வருடங்களாகத்தான் அதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் யாரும் இதைப்பற்றி பேசியதில்லை. இது நகை வியாபாரிகளின் ஒரு வகையான வியாபார யுக்தி என்றே சொல்லலாம்.
உண்மையில் அட்சய திரிதிக்கும் தங்கம் வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம் நம்மிடம் பணம் இருந்தால் வாங்குவது தப்பில்லை. நாம் புதிய ஆட்சியை எதிர்நோக்கி உள்ளோம், நாம் எல்லோரும் விரும்பும் ஆட்சி வருகிறபோது நம்முடைய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து காணப்படவே வாய்ப்புக்கள் அதிகம்.
அவ்வாறு நடந்தால் தங்கம் விலை மேலே அதிகம் செல்வதற்கான காரணிகள் குறைவு. எந்த ஒரு செயலையும் உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக நெருங்கினால் நம்மால் ஒரு சிறந்த வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் மிகையாகாது