இணையதளங்களில் பிரபலமானவர்களை தேடும் வரிசையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பின்னுக்கு தள்ளினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதேபோன்று இந்திய அளவில் அதிமுகவின் இணையதளம் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுக,திமுக, ஆகிய கட்சிகளின் இணையதளங்கள் பிரபலமானவை. இந்த இரு கட்சிகளின் இணையதளங்களுக்கு வரும் பார்வையாளர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது திமுக இணையதளத்தை பார்க்கவரும் பார்வையாளர்களை விட அதிமுக இணையதளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளின் இணையதளங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிகளில் அதிமுக இணையதளம் 18,853 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அ.தி.மு.க. இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்கள் குறைந்தபட்சம் அதில் உள்ள 5 தகவல் பக்கங்களுக்காவது வருகை தருகின்றனர். சராசரியாக ஒவ்வொருவரும் 6 நிமிடங்களுக்கு மேல் அவர்கள் இத்தளத்தில் செலவு செய்துள்ளனர். மேலும் அதிமுகவின் ஃபேஸ்புக் தளத்தில் மிகக்குறுகிய காலத்தில் 50,000 பேர் லைக் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், போன் செய்து ஜெயலலிதாவின் பிரசாரத்தை கேட்கும் புதுமையும் அ.தி.மு.க.வால் செயல்படுத்தப்பட்டது. இதற்கு இளைஞர்களிடம் இருந்த நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.