திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள். அதிர்ச்சியில் அதிகாரிகள்.

11புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த திருநள்ளாறு சனீஸ்வரர் திருக்கொவிலில் உள்ள நளன் குளத்தில் உள்ள மீன்கள் நேற்று செத்து மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நளன் குளத்தில் மூழ்கி குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குளத்தின் நீரை வெளியேற்றிவிட்டு ஆழ்குழாய் மூலம் தண்ணீரை மாற்றும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபடுவர்.

இந்நிலையில் நேற்று தண்ணீரை மாற்ற கோவில் ஊழியர்கள் வந்தபோது குளத்தில் வளர்க்கப்பட்டு வரும் மீன்கள் செத்து மிதப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்தினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் இறந்துபோன மீன்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சனீஸ்வரர் கோவில் நிர்வாகி ஒருவர் கூறியபோது, “குளத்தில் உள்ள தண்ணீர் தினமும் சுத்திகரிக்கப்படுகிறது. அவ்வப்போது தண்ணீரை அகற்றி, புதிதாக தண்ணீர் விடப்படுகிறது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தினால் குளத்தின் தண்ணீர் சூடாகிவிட்டது. சனிக்கிழமை இரவு திடீரென பெய்த மழையால் தண்ணீரின் தட்பவெப்பம் மாறி, சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம்” என்று கூறினார்.

Leave a Reply