18 வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே நேரடியாக வங்கிக்கணக்கு ஆரம்பிக்க முடியும் என்ற நிலையை மாற்றி இனிமேல் 10 வயதுக்கு மேற்பட்டவர்களும் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை தொடங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி இன்று அனுமதி கொடுத்துள்ளது. அனைவருக்கும் வங்கிச் சேவை சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 வயது இருந்தாலே வங்கிக்கணக்கு தொடங்க அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் 18 வயது வரை அவர்களது கணக்கில் இருக்கும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், 18 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களை பாதுகாவலராக பதிவு செய்து சேமிப்பு கணக்குகளை தொடங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இனி சிறுவர், சிறுமிகள் தங்கள் பெயரில் நேரடியாக வங்கிக் கணக்கு தொடங்கி, அதை அவர்களாகவே பயன்படுத்த முடியும்,. மேலும் அவர்களுக்கு தொடங்கப்படவுள்ள கணக்குகளுக்கு இணையதள சேவையும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.