முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் இடுக்கியில் நாளை முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், கேரளா அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று காலை தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கேரள மக்கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே இன்று முல்லைப் பெரியாறு அணை நடவடிக்கை குழு விடுத்த ஒரு அறிக்கையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் இடுக்கியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதனிடையே தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் உம்மன்சாண்டி, “முதல் கட்டமாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன் இன்று அமைச்சரவை கூட்டப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.