அம்மா உணவகம், அம்மா தண்ணிர் பாட்டில், போன்ற வெற்றிகரமான திட்டங்களை அடுத்து அம்மா வாரச்சந்தை தொடங்கப்படவுள்ளது. முதலில் சோதனை முயற்சியாக சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
அம்மா வாரச்சந்தையை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்ள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மேயர் கூறியுள்ளார்.
வாரச்சந்தை அமைக்க தேவையான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், காலியாக உள்ள இடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
மகளிர் குழுக்கள், சிறைக் கைதிகள் ஆகியோர்கள் தயாரித்த பொருட்கள், மற்றூம் அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் ஆகியவற்றோடு காய்கறிகள், மளிகைப்பொருட்கள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய அனைத்தும் இந்த அம்மா வாரச்சந்தையில் விற்பனை செய்யப்படும்.
அம்மா வாரச்சந்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை இயங்கும் என்றும், கூறப்படுகிறது. இந்தசந்தையில் செருப்புகள், ஆடைகள் போன்றவற்றையும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.