கடந்த சட்டசபை தேர்தலில் டெல்லியில் படுதோல்வி அடைந்த முதல்வர் ஷீலா தீட்சித் அவர்களின் மகன் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இன்று அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் “நான் எனது தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை சிறிதும் எனக்கு ஏற்படவில்லை” என்று மிகவும் விரக்தியுடன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தபோதே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களின் மனதில் பதிந்துள்ள எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் மேலிடம் தவறிவிட்டதாக கூறிய அவர், கடந்த தேர்தலில் இதே தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெறும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறிவந்துள்ளன. ஆம் ஆத்மி, மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் டெல்லியில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றும் சூழ்நிலையில் இல்லை என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன.