ராஜஸ்தான் அணி கொடுத்த 190 ரன்கள் என்ற இலக்கை வெறும் 14.3 ஓவர்களில் அடித்து மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்த சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்று நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் மும்பை அணி மிக அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணியை மிக எளிதில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைஅணி 14.3 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக 14.2 ஓவர்கள் முடிந்தபிறகு வெற்றி பெற மும்பை அணிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் அந்த ஒரு பந்தில் நான்கு ரன்கள் எடுக்கவேண்டும் என்று பேட்ஸ்மேன் ஆதித்ய தாரேவுக்கு கூறப்பட்டது. எனவே கடைசி பந்தை ஆறு ரன்களுக்கு விரட்டி மும்பையை ப்ளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்றார்.